திவசம், திதி, சிராத்தம் அவசியம் தானா?

திவசம், திதி, சிராத்தம்

எங்கே பிராமணன்?(சனாதன தர்ம முத்துக்கள்!)

கேள்வி : திவசம், திதி என்றெல்லாம் சொல்கிறார்களே அது எதற்காக? போகிறவர்கள் என்றைக்கோ போய்ச் சேர்ந்தாகி விட்டது. அவர்களுக்கு வருடா வருடம் இந்த மாதிரி ஒரு சடங்கு தேவையா? இங்கே கொடுக்கிற எள், தண்ணீர், பிண்டம் போன்றவை அங்கே அவர்களுக்குப் போய்ச் சேர்ந்து விடுமா? அவர்கள் இருக்கிற இடம்தான் உங்களுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் சொல்கிற மந்திரத்தின் மூலமாக, அவர்களுக்கோ அல்லது உங்களுக்கோ என்ன நன்மை விளையப் போகிறது? இந்தச் சடங்கு எதற்காக? பகுத்தறிவுக்கு இது சற்றும் ஒவ்வாதது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?

திரு. சோ : நீங்கள் பகுத்தறிவு என்று பேசுவதால் முதலில் அந்த விஷயத்தைப் பார்ப்போம். இப்போது ஒரு தலைவரின் சமாதி என்று ஒன்றை நிறுவி, அங்கே போய் வருடா வருடம் மலர் வளையம் வைக்கிறார்கள். ஏன்? அந்தத் தலைவரும் என்றைக்கோ போய்ச் சேர்ந்து விட்டவர்தானே?

இங்கே இவர்கள் வைக்கிற மலர் வளையம், அங்கே அவருக்குப் போய்ச் சேர்ந்து விடுமா? அல்லது அந்த மலரின் வாசனை அவருக்குப் போய் விடுமா? அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியாது. அதை மட்டும் ஏன் செய்கிறார்கள்? அதுவும் அவர் என்று இறந்தாரோ, அந்தத் தேதியில் போய்ச் செய்வானேன்? மற்ற தினங்களில் செய்தால், அந்த மலர் வளையம் அவருக்கு ஏற்புடையதாகாதா? அவர் இறந்த தினத்தன்று இந்த மரியாதையை ஒரு அரசியல்வாதி செய்யவில்லை என்றால், உடனே அவரைப் பற்றி பல விமர்சனங்கள் வருகின்றன. ‘இறந்த தலைவர் மீது இவருக்கு மரியாதை இல்லை’ என்ற பேச்சு வருகிறது. சரி, இப்படி மலர் வளையம் வைப்பதால் ஒருவேளை ஓட்டு வருமோ, என்னவோ தெரியாது.

ஆனால், நீங்கள் குறிப்பிட்ட திவசம், திதி இதைச் செய்வதால் புண்ணியம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இறந்தவர்களுக்கு நாம் சிராத்தம் செய்கிறபோது, அது அவர்களுடைய பிரேதத்திற்காகச் செய்யப்படுகிற காரியம் அல்ல.
அவர்கள் மூன்று உருவில் இருக்கிறார்கள்.
ஒன்று – ஆதித்ய ரூபம்;
இரண்டாவது – ருத்ர ரூபம்;
மூன்றாவது – வஸு ரூபம்.

அந்த ரூபத்தில் அவர்களுக்கு நாம் செய்கிற மரியாதை இங்கே செய்யப்படுகிற சிராத்தம். சிரத்தையோடு செய்யப்படுவதே சிராத்தம். இதில் முக்கியமானதே சிரத்தைதான். இந்த சிராத்தத்தைத்தான் திவசம், திதி என்றெல்லாம் சொல்கிறோம்.

இது ஒரு பண்டிகை அல்ல. இதை மிகவும் விமரிசையாகச் செய்யக் கூடாது. ‘ச்ராத்தம் ந விஸ்தாரயேத் தீமான்…’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது அறிவுடையோன் சிராத்தத்தை விமரிசையாகச் செய்ய மாட்டான். ஏனென்றால், இது ஒரு பொதுக்காரியம் அல்ல. சிராத்தத்தைச் செய்கிறவன் தனது முன்னோர்களுக்காகச் செய்கிற காரியம் இது. அதில் பெரிய விருந்து, படாடோபம் எல்லாம் கூடாது.

இறந்த முன்னோர்கள் எங்கே இருக்கிறார்கள்? நம்மால் பார்க்க முடியாதுதான். ஆனால், இன்று விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்? வானுலகில் சில இடங்களில் ஜீவ ராசிகள் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். நிச்சயமாக அங்கு ஜீவராசிகள் கிடையாது என்று அவர்கள் சொல்லவில்லை. அந்த ஜீவராசிகளின் சக்தி என்ன, அவர்களுடைய அறிவு என்ன – என்பதெல்லாம் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் சொல்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சிகள் இப்படியே தொடர்ந்து, ஒரு கட்டத்தில், ‘மேலுலகில் ஜீவராசிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்; அவர்களுக்கெல்லாம் நல்ல அறிவு இருக்கிறது.

அவர்கள் நம்மை விட மிகவும் நுட்பமான அறிவு கொண்டவர்கள், திறன் கொண்டவர்கள்’ என்றெல்லாம் விஞ்ஞானிகள் கூறினால், நாம் என்ன சொல்வோம்? ‘ஏதோ விஞ்ஞானிகள் சொல்கிறார்கள், நமக்கு என்ன தெரியும்? நமக்கும் விஞ்ஞானத்திற்கும் சம்பந்தம் இல்லை’ என்றா சொல்வோம்? அப்படிச் சொல்ல மாட்டோம். விஞ்ஞானிகள் சொல்லி விட்டால் சரி என்று ஏற்று விடுவோம். அவர்கள் சொல்வதே அதற்கு நிரூபணம் ஆகி விடும். அதற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து வேறு விஞ்ஞானிகள், இவர்களிடமிருந்து மாறுபட்டால், அதையும் நாம் ஏற்றுக் கொள்வோம். அதாவது அங்கே நம்முடைய சுய அறிவு என்பதற்கு வேலையே கிடையாது. என்ன சொல்லப்படுகிறதோ, அதை கண்மூடித்தனமாக ஏற்று விடுவோம். ஏனென்றால், அப்போதுதான் நமக்கு எல்லாம் புரிந்து விட்ட மாதிரி காண்பித்துக் கொள்ள முடியும். ஆனால், இப்பொழுது நம்பிக்கை ரீதியாக சிராத்தம் என்று சொன்னால், ‘யாருக்கு? எங்கே இருக்கிறான்?’ என்றெல்லாம் கேட்கிறோம்.

பித்ருக்கள் – அதாவது – மறைந்த முன்னோர்கள் ஆதித்யர்கள், ருத்ரர்கள், வஸுக்கள் ஆகிய மூன்று உருவில் இருக்கிறார்கள் என்று சொன்னோம். எட்டு வஸுக்கள், பதினோரு ருத்ரர்கள், பன்னிரெண்டு ஆதித்யர்கள் இன்னும் சிலர் பித்ரு தேவர்கள் என்று கூறப்படுகிறார்கள். இவர்களுடைய ஆதரவில்தான் நமது முன்னோர்கள், தங்களுடைய கர்மம் முடிகிற வரை, பித்ரு லோகத்தில் தங்குகிறார்கள். கர்மம் முடிந்த பின்பு, அவர்களுடைய அடுத்த பிறவி வரும். அதுவரை பித்ரு லோகத்தில் இருக்கிற அவர்களுக்கு நாம் சிராத்தம் செய்கிறோம்.

ஒரு புண்ணிய தீர்த்தத்தில் சென்று சிராத்தம் செய்தால், அது தீர்த்த சிராத்தம். கங்கையில் செய்தால், அது கயா சிராத்தம். இப்படி பல சிராத்தங்கள் கூறப்பட்டுள்ளன.பித்ரு தேவர்களையும், பித்ருக்களையும் வணங்கி நாம் செய்கிற சிராத்தம், ஹிந்து மதச் சடங்குகளில் மிகவும் புனிதமானவற்றில் ஒன்று.

Please follow and like us:

admin

Astro Ranjith Babu is a professional astrologer in Madurai has good experience in Veda Jothidam, KP Jothidam undertake all types of astro predictions.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *